ஸ்ரீ அற்புத நரத்தன விநாயகர் தேவஸ்தானம்

அமைவிடம்
கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியில், கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ளது ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் தேவஸ்தானம்.


வரலாறு
விநாயகர் வழிபாடு தொன்றுதொட்டு நம்மிடத்தே காணப்படும் ஒன்றாகும். அந்த வகையில் விநாயகப் பெருமான் ஆற்றங் கரையிலும், குளக்கரையிலும் வீற்றிருந்துஎமக்கு அருள் பாலிக்கிறார்.
சைவ ஆசாரமும் ஒழுக்கமும் பக்தியும் ஒருங்கே பூத்துக் குலுங்கும் கோண்டாவிலிலே, கீழ்த்திசையில், பலாலி வீதியில், கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் தேவஸ்தானம் அமைந்திருப்பது எமது பாக்கியமே.
ஒரு நூற்றுமுப்பது வருடங்களுக்கு முன் நல்லூர்க் கந்தனின் மகோற்சவ காலத்தில் அங்கு சென்று வரும் அடியார்கள் வருந்துவதை கண்டார் கந்தையர் கணபதியார் அவர்கள். ஆகவே, அவர் ஒரு தாகசாந்தி நிலையத்தை நிறுவ தீர்மானித்தார்.அதற்கு நிரந்தரமான கட்டடம் ஒன்று வேண்டும் என்பதை உணர்ந்த அவர் சந்தியிலே காணி வாங்கி 1880-ம் ஆண்டு மடம் அமைத்தார். வருடா வருடமும் கணபதியார் குடும்பத்தினரால் அத் தாக சாந்திப் பந்தல் அமைக்கப்பட்டு நல்லூர்க்கந்தன் உற்சவம் நிறைவடைய அகற்றப்படும். முந்நூறு ரூபாவை மூலதனமாகக் கொண்ட இத் தர்ம காரியம் நாளா வட்டத்தில் வளர்ந்து, ஆலயமொன்றை அமைக்குமளவுக்கு காலூன்றியதும் எம்பெருமானின் திருவருட்செயல் தான்.
1965-ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிந்து தண்ணீர்ப்பந்தலை பிடுங்கும் போது அங்கிருந்த எல்லோர் மனத்திலும் விநாயகர் ஆலயமொன்றை அமைக்க வேண்டுமென்ற தெய்வீக சிந்தனை தோன்றியது. அச் சிந்தனையில் வேலுப்பிள்ளை சரவணமுத்து (ஆசைப்பிள்ளை) அவர்களும், சின்னத்துரை சுப்பிரமணியம் (இராமுப்பள்ளை) அவர்களும் உறுதியாக இருந்தனர்.
ஆவணிச் சதுர்த்திக்கு முன் தினம் இரவோடு இரவாக 9' x 9' அளவான சிறு கட்டடமொன்றை அமைத்தனர். மறுநாள் சதுர்த்தியில் பகல் 12 மணிக்கு ஒரு மூர்த்தியை வைத்து அபிஷேகம் செய்தனர். அன்று முதல் 48 நாட்களுக்கு அபிஷேகம் செய்தனர். பொது மக்களின் வழிபாட்டுக்குரிய புனித பூமியாய் திகழ்ந்த இக் கோவிலில் காலையும் மாலையும் பூசை நடைபெற்றது. பூசகராகத் திரு.இராமப்பிள்ளை அவர்கள் தொண்டாற்றி வந்தார். 1965-ம் ஆண்டு மூலஸ்தானத்திற்கு முன்புறமாக 5அடி மண்டபமொன்று அமைக்கப்பட்டது. 1970-ல் மண்டப வேலைகள் பூர்த்தியாகி ஆவணிச் சதுர்ரியை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் தினங்கள் அலங்காரஉற்சவம் நடைபெற்றது. திருவெம்பாவை, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, விநாயகர் சஷ்டி, நவராத்திரி என்பன இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறன.
கோயில் வடபாரிசத்தில் 14.02.1978 ல் சமாதியடைந்த தவத்திரு. கந்தையாச்சுவாமி அவர்களின் சமாதிக் கிரியைகள் 16.02.1978 வியாழக்கிழமை பூர்த்தியாக்கப்பட்டுச் சமாதிக் கோவிலொன்றும் கட்டி எழுப்பப்பட்டது. சுவாமிகளின் கோவிலிலே காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பாணலிங்கம் தாபிக்கப்பட்டது.
இவ்வாறு 1 1/4 நூற்றாண்டு வரலாற்றுப் பெருமை மிக்க கோண்டாவில் ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் தேவஸ்தானம் இன்றுபூரண பொலிவுடன் விளங்கி வருகிறது.


தற்கால நிகழ்வுகள்
தற்போது இங்கு கதிர்காமநாதக்குருக்கள் பூசையாற்றி வருகிறார். இங்கு மூன்று வேளைப் பூசைகள் நடைபெறுகிறன. மாதாமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் குடைச்சாமியார்(கந்தையாச்சுவாமி) குருபூசை நடைபெறுகிறது. வருடந்தோறும் தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, இலட்சார்ச்சனை, பிள்ளையார் கதை, திருவெம்பாவை என்பன சிறப்பாக நடைபெற்று வருகிறன.


அலங்கார உற்சவம்

ஆவணிச் சதுர்த்தியை இறுதிநாளாகக் கொண்டு அலங்கார உற்சவம் ஆரம்பமாகி பத்து தினங்கள் இடைபெறும். இங்கு பூச்சப்பறம், இரதோற்சவம் நடைபெறுகிறது.


மூர்த்திகள்

கர்ப்பக்கிருகத்தில் விநாயகப்பெருமானும், வசந்தமண்டபத்தில் விநாயகர், பஞ்சமுகவிநாயகர், நடராஜமூர்த்தம் என்பன காணப்படுகிறன. மூலஸ்தானத்திற்கு வடக்கே தெற்கு நோக்கி சந்தானகோபாலரும், வடகிழக்கில் மேற்கு நோக்கி இலக்சுமிதேவியும், மூலஸ்தானத்திற்கு பின்புறம் விநாயகரும், மூலஸ்தானத்திற்கு தென்கிழக்கில் மேற்கு நோக்கி முருகப்பெருமானும், தெற்கே வடக்கு நோக்கி நால்குரவர்களும், தென்மேற்கே கிழக்கு நோக்கி வைரவர்பெருமானும், மூலஸ்தானத்திற்கு அருகில் தெற்கு நோக்கி சண்டேஸ்வரரும் வீற்றிருக்கிறனர்.

No comments:

Post a Comment