சிவமகா காளி அம்பாள் தேவஸ்தானம்
அமைவிடம்
கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியில், உப-தபாற்கந்தோருக்கு அருகில் காணப்படுகிறது சிவமகா காளி அம்பாள் தேவஸ்தானம்.
வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இளையதம்பி
தெய்வானைப்பிள்ளை எனும் அம்மையாரில் காளி உக்கிரமாக உருக்கொண்டு ஆடி
வந்தாள். ஆதலால், இளையதம்பி அவர்கள் அந்த அம்மையாரை வருத்தாது ஒரு இடத்தில்
அமர்ந்தால் நாங்கள் பொங்கல், பூசை செய்து வழிபாடாற்றுவதாக கூறியதற்கிணங்க
1850 ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் அவருடைய காணியில் வடக்குப் பக்கமாக
ஓரிடத்தில் அமர்ந்தார். அவர்கள் அவ்விடத்தில் ஒரு சிறு குடில் அமைத்து
பொங்கல், பூசை வழிபாடாற்றி வந்தனர். சிறிது காலம் சென்ற பின் அருகில்
உள்ளவர்களும் வழிபாடாற்றத் தொடங்கினர்.
1890 ல் மடலாயமாக சாந்துக்கட்டினால் மூலஸ்தானம் அமைத்து,
வீர சைவ மரபினரான இந்தியாவிலிருந்து வந்த ஏரம்பக் குருக்களை வைத்துப்
பூசையாற்றி வழிபாடுகள் செய்து வந்தனர். வெள்ளி, செவ்வாய்களில் ஒரு
நேரப்பூசை நடைபெற்றது. ஆனி மாத பூரணைக்குப் பிறகு சனிக்கிழமை அன்று மடை
போட்டு பொங்கல் பூசை செய்து வேள்வி நடைபெற்று வந்தது. 1930ல்
திருமஞ்சனக்கிணறு வெட்டப்பட்டு பொலிகல்லினால் வரிவர்க்கம் அமைத்து ஆலய
விதிப்படி கிணறு அமைக்கப்பட்டது. வேள்வி நடந்து வரும் காலத்தில்
மக்களுக்கிடையே போட்டி ஏற்பட்டு தங்களுடைய காணியில் காளிகோயில் அமைத்து
வேள்விசெய்து பூசை செய்து வந்தார்கள். அது அவ்வாறிருக்க 1952ல் முதல் முதல்
யாழ்ப்பாணத்திலே சிவமகா காளி கோவிலில் வேள்வி நிறுத்தப்பட்டது.
1957ல் ஆலயத்தில் வெளியே வேள்விக்காக
முன்னர் அமைக்கப்பட்டிருந்த காத்தவராயன் இருப்பிடன் வரை முன் மண்டபம்
அமைக்கப்பட்டது. அதன் பின் பரிவார மூர்த்தியாக பிள்ளையார்,
வள்ளி-சுப்பிரமணியர்-தெய்வானை, நவக்கிரக கோவில், வைரவர் ஸ்தாபிக்கப்பட்டு
தினமும் இரு காலப்பூசை நடைபெற்று வந்தது. அப்போது நவராத்திரி மாத்திரம்
விஷேடமாக கொண்டாடப்பட்டது. 1990ல் மாசி மகத்தை இறுதியாக வைத்து
அலங்காரத்திருவிழா நடைபெற்றது.
1998ல் கித்திரை மாதம் பூரணையில்
பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 2005ல் தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் மகா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2006 தொடக்கம் மாசி மகத்தைஇறுதியாகக் கொண்டு
15 நாட்கள் மகோற்சவமும், பின் 5 நாட்கள் அலங்கார உற்சவமும் நடைபெற்று
வருகிறது.
தற்கால நிகழ்வுகள்
இவ்வாலயத்தில் தற்போது வ.அரவிந்தசர்மா குருக்கள் பூசையாற்றி
வருகிறார். இவ்வாலயத்தில் ஆறுகால பூசைகள் நடைபெற்று வருகிறன. நவராத்திரி
போன்ற விரதங்கள் சிறப்பாக வருடாவருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாலயத்தின் முன் புறத்தில் காணப்படும் காத்தவராயனுக்கு பழைய கால சடங்குகள் முறைப்படி கிரியைகள் செய்யப்பட்டு வருகிறன.
வருடா வருடம் சிவராத்திரி தினத்தன்று மாலையில் அரசடி
விநாகயர் ஆலயத்திலிருந்து அடியார்களால் பால் செம்புகளில் கொண்டு
செல்லப்பட்டு, காளி தேவஸ்தான தென்மேற்கு மூலையில் காணப்படும்
காசிலிங்கநாதருக்கு ஊற்றப்படும். அந்நேரத்தில் லிங்கத்தில் ஒரு பொட்டு
போன்ற ஒளி பிரகாசிக்கும். இந் நிகழ்வே சிவராத்திரி பால்உற்சவம் எனப்படும்.
மகோற்சவம்
மாசி மகத்தை தீர்த்ததினமாக கொண்டு மகோற்சவம்
கொடியேற்றததுடன் ஆரம்பமாகி 15 தினங்கள் நடைபெறும். பின் 5 தினங்கள்
அலங்கார உற்சவம் நடைபெறும். முதல் நான்கு காலம் விநாயகருக்கும், அடுத்த
ஆறுகாலம் முருகனுக்கும், இறுதி ஆறு காலம் காளி அம்பாளுக்கும் யாகம்
நடைபெறும்.
1ம் நாள் - கொடியேற்றம்
7ம் நாள் - பக்திமுத்திபாவன உற்சவம்
11 ம் நாள் - பூச்சப்பறம்
12ம் நாள் - வேட்டைத்திருவிழா (ஆசிமட அரசடி விநாயகர் ஆலய முன்றலில்)
13 ம் நாள் - சப்பறம்
14ம் நாள் - இரதோற்சவம்
15ம் நாள் - தீர்த்தத்திருவிழா
16ம் நாள் - மாரியம்மன் திருவிழா
17ம் நாள் - பூங்காவனம், சிவன்-பார்வதி திருக்கல்யாணம்
18ம் நாள் - சரஸ்வதி, இலக்குமி உற்சவம்
19ம் நாள் - காத்தவராயர் மடை (பழைய கிரியை முறைப்படி), ஆஞ்சநேயர் உற்சவம்
20ம் நாள் - வைரவர் சாந்தியும், உற்சவமும்
மூர்த்திகள்
இக்கோயிலின் கருவறையிலே காளிஅம்பாள் வீற்றிருக்கறாள். உற்சவ
மூர்த்திகளாக சிவன்-பார்வதி, மாரி அம்மன், சரஸ்வதி, பிள்ளையார், ஆஞ்சநேயர்
என்பன காணப்படுகிறன. மற்றும் இலக்குமி, வைரவர், காளி காணப்படுகிறன.
உள்வீதியிலே பிள்ளையார், முருகன், வைரவர், சண்டேஸ்வரி, நவக்கிரகங்கள்,
வைரவர் என்பன காணப்படுவதுடன் வெளிவீதியில் காசீஸ்வர் (ஸ்ரீ சிவபாலயோகி
மஹராஜ் மூர்த்தியுடன்) , ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களும் காணப்படுகிறன.
இவ்வாலய மூலஸ்தானத்திற்கு மேலே ஏழு தளங்கள் கொண்ட தூபி காணப்படுகிறது.
இவ்வாலயத்திலே புதிதாக இந்தியாவிலிருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள
கொடித்தம்பத்திலே சப்தமார்கள், தசாயுதங்கள் என்பனவும் கொடித்தம்ப
பெட்டியிலே யாழி போடப்பட்டு நான்கு திசைகளிலும் பிள்ளையார், காளியம்மன்,
இலக்குமி, சரஸ்வதி ஆகியனவும், அதற்கு மேற்கவசத்தில் வரிவர்க்கங்கள்
காட்டப்பட்டு உள்ளன.
நவக்கிரக கோவிலிலே மேலே காணப்படும் நவக்கிரக உருவங்கள் இந்திய சிற்பாசிரியர்களால் சிறப்பாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment