அமைவிடம்
கோண்டாவில் கிழக்கு புகையிரதநிலைய வீதியில் (குறுக்கொழுங்கை) அமைந்து காணப்படுகிறது ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம்.

வரலாறு
அபிராமி அன்னையை பக்தர்கள் எந்த ரூபத்தில் வழிபடுகிறார்களோ அவ்வடிவில் தோன்றிக் காட்சியளிப்பவள் அன்னை. அந்த வகையில் கோண்டாவில் கிழக்குப்பகுதியில் வாழ்ந்த அன்பர்கள் புற்றிலுள்ள நாகபாம்பினையும் புற்றின் மத்தியில் தோன்றிய அம்மன் ரூபத்தையும் இணைத்து ஸ்ரீ நாகபூசணி அம்பாள் எனப் பெயர் சூட்டி வணங்கினர்.
150 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பர் என்பவரின் காணியில் ஒரு வில்வ மரமும் பிரன்நாரி என்ற கொடியும் ஒருங்கே நின்றனவாம் அக்கொடி வில்வ மரத்தை சுற்றி கொடிமரத்தை சுற்றிய கொடிச்சீலை போல காட்சியளித்தது. சிறிது காலத்தின் பின் அம்மரத்தடியில் ஆலய ஸ்தூபி வடிவில் கறையான் புற்று வந்ததை கண்டார்கள். அப் புற்றில் நாகபிரான் இருப்பதைக் கண்ட அடியவர்கள் காணி சொந்தக்காரரின் உதவியுடன் அவ்விடத்தை துப்பரவு செய்து பந்தலமைத்து வழிபாடாற்றி வந்தனர்.
சில அடியவர்களுக்கு கனவில் தோன்றி ”நான் நாகசக்தியாக உள்ளேன். எனக்கு ஒரு சாலை அமைத்து வழிபடுங்கள். உங்களை சிறப்புடனும் நலமுடனும் வாழ வைப்பேன்” என கூறி அருளினார். உடனே சின்னப்பர் விதானையாரின் காலத்தில் அவ்விடம் புண்ணிய ஸ்தலமாக்கப்பட வேண்டும் என்ற ஆசையினால் அடியார்களின் உதவியுடன் கொட்டிலமைத்து வீர சைவ அர்ச்சகரான கிருஷ்ண ஐயாவைக் கொண்டு பூசை ஆராதனைகள் செய்துவந்தார்கள்.
அவ்வேளையில் எமது கிராமத்தில் அம்மன் நோய் பரவத்தொடங்கியது. நம்பிக்கையுடன் அடியார்கள் அப் புற்று மண்ணையும் விபூதியையும் கலந்து பூசியதுடன் அம்மன் நோய் மாறியது உண்மை. அதன் பின் அம்பாளும் நாகமும் ஒன்றாக கலந்து உள்ளதை உணர்ந்த அடியார்கள் அவ்விடத்தில் கோயிலமைத்து ஸ்ரீ நாகபூசணி அம்பாள் என பெயர் சூட்டி அலங்காரத் திருவிழா நடத்தி வந்தனர்.
அடியார்கள் பலரும் சேர்ந்து மேலும் அவ்வாலயத்தை வேதாகம முறைப்படி அமைத்து மகோற்சவம் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்டு சின்னப்பர் விதானையாரின் ஆசியுடனும் மக்களின் பேருதவியுடனும் இரத்தினசிங்க விதானையாரின் தலைமையிலும் கோயில் சிறப்பாக அமைக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக மகோற்சவம் நடைபெற்று வருகிறது.
தற்கால நிகழ்வுகள்
இவ் ஆலயத்தில் மூன்றுவேளைப் பூசைகள் நடைபெறுகிறன. மற்றும் இங்கு நவராத்திரி, மாதப்பூசைகள், இலட்சார்ச்சனை என்பன விஷேடமாக நடைபெறுகிறன.
மகோற்சவம்
இவ் ஆலயத்தில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2ம் நாள் கைலாயவாகனம், 4ம் நாள் மஞ்சம், 8ம் நாள் சப்பறம், 9ம் நாள் இரகதாற்சவம் (தேர்த்திருவிழா) நடைபெறும். 11ம் நாள் பூங்காவனம் நடைபெறும்.
மூர்த்திகள்
இவ் ஆலயத்தில் கர்ப்பக்கிருகம் கிழக்கு நோக்கியும், வசந்த மண்டபம் தெற்கு நோக்கியும் காணப்படுகிறன. கர்ப்பக்கிருகத்தில் நாகபூசணி அம்பாள் வீற்றிருந்து அருள் பாலிப்பதுடன், வசந்தமண்டபத்திலும் பிள்ளையார், நாகபூசணி அம்பாள், முருகன் ஆகிய மூர்த்தங்கள் அருள் பாலிக்கின்றன. கொடித்தம்பம், பலிபீடம் என்பன காணப்படுவதுடன் கொடித்தம்பத்திற்குக் கீழே மூலாதாரகணபதி வீற்றிருக்கிறார்.
தென்மேற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி விநாயகப்பெருமானும், மேற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி சந்தானகோபாலர் மற்றும் நாகதம்பிரானும், வடமேற்குப் பக்கமாக கிழக்கு நோக்கி முருகக் கடவுளும் வீற்றிருப்பதுடன் சண்டேஸ்வரப் பெருமானும் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். வசந்த மண்டபத்திற்கு முன் புறத்தில் நவக்கிரக மூர்த்திகளும், வைரவ மூர்த்தியும் காணப்படுகிறன.
திருமஞ்சனக்கிணறு கர்ப்பக்கிருகத்திற்கு வடக்காகவும், தீர்த்தக் கிணறு சப்பறத்தரிப்பிடத்திற்கு அருகிலும் காணப்படுகிறன.
No comments:
Post a Comment